Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, January 7, 2012

தானே............

ஆண்டிறுதியில்
ஒரு
அவலம் அறங்கேறியது.

தானே வந்த
தானே புயலால்
தவித்தது
மரங்களும் மக்களுமா?
நானுந்தான்.

காதல் சிறு பஞ்சை
காத்து வைத்திருந்த நெஞ்சை
காததூரம் வீசியெறிந்து
கலங்கடித்துவிட்டது.

உள்ளுக்குள்
உருண்டு திரண்ட
உன்
நினைவுகளை
உலுக்கிவிட்டுச் சென்றது.

கரையைத் தாண்டி
கான்கிரீட் சாலைகளில்
கற்களை வீசியதைப் போல்
மனத்தில் தங்கியிருந்த
நிகழ்வுகளின் குவியல்களை
வெளிக்கொணர்ந்து
வெறுப்பேற்றிச் சென்றது

வானை நோக்கி
வளர்ந்த பெருமரங்கள்
ஆனை சரிந்ததுபோல்
அடியோடு பெயர்ந்தபோது
நம் காதல் மரம் சாய்ந்த
நாட்களையே நானுணர்ந்தேன்

பசுமையாய் இருந்த எதையும்
பார்க்க சகிக்காத
தானே புயல்
பழி தீர்த்துக் கொண்டதுபோல்
பசுமையான
உன் சார்ந்த தருணங்கள்
பறந்துவிடாமல்
பாதுகாத்துக் கொண்டிருக்கின்றாய்.

தானே வந்ததுபோல்
நீயும்
தானே தான் வந்தாய்

தனியாய்
புலம்பவிட்டு
தடம்பதித்துச் சென்றாய்....................

Thursday, July 28, 2011

அலையழகி

ஆண்டுக்கொரு முறைவரும்
ஊர்த் திருவிழா

ஆனால்
ஆண்டுமுழுவதும்
உன்
அவதார நாள்
நோக்கியே
என்
அத்தனை அடிகளும்.

நீ
என்னில் விதைத்த
பதிவுகள்
பதியமாய்
நெஞ்ச நிலத்தின்
வெளிமுழுவதும்
விரவிக் கிடக்கின்றன.
அலைக்கும்
நம்மிருவருக்கும்
அப்படியொரு நெருக்கம்.

நீ
அலைத்தாயின்
அடிமடியில்
அருந்தியவள்
நான்
அலைத்தாயின்
ஓரப்பார்வையில்
உயிர்வளர்ந்தவன்.

அதனால் தானோ
என்னவோ
அப்படியொரு ஈர்ப்பு
உன்
அகலவிரிந்த
அணு விழிகளின்
மீதெனக்கு.

ஆண்டுகள் பலவானாலும்
மீண்டும் மீண்டும்
மீள்பார்வையில்
உன்
பார்வை மட்டுமே.

வீட்டுக்கொரு
மரம் வளர்த்தால்
ஊரே காடாகும்.
உள்ளம் முழுக்க
உன் நினைவுகள்
எள்ளுக்கும் இடமின்றி
எத்தனை பதிவுகள்.

நெஞ்சக் காட்டுக்குள்
நீக்கமற நிறைந்திருப்பவை
உந்தன் நினைவுமரங்கள்

யாராலும் வெட்ட முடியாத
காதல் தோப்பின்
கனவு மரங்கள்.

பழகிய நாட்களின்
பசுமை போர்த்திய
பரந்த சொல்வெளிகள்.

அழகிய உடைகளின்
அணிவகுப்பான
மலர்ச்செடிகள்.

கண்ணசைவின்
காந்தப்புல விசைகள்.

நிமிர்ந்து நடக்கையில்
நின்
நெஞ்சை விட்டு
நீள்விழி நோக்குவேன்.

கொஞ்சம் குனிந்து
வஞ்சகம் செய்யாமல்
வாரி வழங்கிடுவாய்
பார்வை பருக்கைகளை.

எலிக்கறித் தேடும்
ஏழை உழவனுக்கு
களி கிடைத்தார்போல்
களிப்பெய்திடுவேன்.

கல்லூரி காலத்தின்
கொடைக்கானல் செலவு
உள்ளூறி உறைந்து கிடக்கையில்
நல்ல வேலையாய்
நாமிணைந்து செல்ல
இன்னுமொரு வாய்ப்பு.

ஒண்றாய் உண்டு
ஒண்றாய் கலந்து
உறவாடி மகிழ்ந்த
உன்னத கணங்கள்.

உன்
பிறந்தநாள்
என்றாலே எனக்கு
கோடை விடுமுறையைக்
கொண்டாடும்
குழந்தையின் மகிழ்ச்சி.

ஆடை மறந்து
அடைமழையில்
ஆடித் திரிந்திடும்
அம்மண மகிழ்ச்சி

சோடி சேராவிட்டாலும்
சோகத்தை பங்கிடும்
சுகமான மகிழ்ச்சி.

உன்னை
உன் நினைவுகளை
என்னால் எப்போதும்
கண்ணகல முடிவதில்லை.

வளர்பிறையென
வளமும் நலமும்
உனைச்சேர
குளிர் நிலவென
குழந்தை, துணையும்
உனைச் சூழ
களிப்பினினில்
காலமெல்லாம்
நீ வாழ்க
வாழ்க வாழ்க

Thursday, April 29, 2010

மரணம்

அன்பை
ஆராதிக்காமல்
அடக்கிட முயன்றால்
ஆபத்து சூழந்து
அவசியம் வரலாம் மரணம்.

சேர்வதும் பிரிவதும்
தெய்வத்தின் செயலானால்
யார் விரும்பி ஏற்பார்
காதலர் பிரிவை விரும்பும்
கடவுளை.

உயிரின் தோற்றமே
காதலின் தோற்றம்

காதலின் வலிமையே
சாதலின் எளிமை

நெஞ்சுக்குள் குடிபுகுந்த
நேசவுயிர்
ஒருபோதும்
சென்றுவிட முடியாது
நினைத்தபடி தனியாக.

மரணங்கள்
காதலை
வாழவைத்துக் கொண்டிருக்கின்றன
மனிதன் தோன்றியது முதல்.

வாழும் புவியில்
வாழவே பிறந்தோம்
வாழட்டும் காதல்
மரணத்தை வென்று..

Wednesday, December 2, 2009

காதல் தேசம்


நம்

காதல் தேசத்தில்

உன்

வார்த்தைகள் தான்

தேசியகீதம்


உன்

கூந்தல் அசைவுகள் தான்

தேசியக்கொடி


உன்

மௌனம் தான்

கொள்கை முழக்கம்

Tuesday, December 1, 2009

பேராசை

திரையிசையில்
உன் பெயர்
ஒலித்தால்
என் காதுகள்
மீண்டும் மீண்டும்
எதிரொலிக்கும்

விளம்பரத்தில்
உன் பெயர்
உச்சரிக்கப் பட்டால்
நச்சரிக்கும்
என் காதுகள்.

பெயர் என்ன
அடையாளக் குறியீடு மட்டுமா?
உயிர் உறையும் உன்னதம்

அந்த
ஒற்றைச் சொல்லில்
ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.

ஆம்
என் ஆன்மா
உன் பெயரைக் கேட்டால் தான்
உயிர்த் துடிப்போடு


Tuesday, November 24, 2009

தீவிரவாதம்

நீ
என்னைப் பார்த்ததில்
என் கண்கள்
அளவு கடந்த ஓளிப் பிழம்பால்
ஒரு கணம் இருண்டு போயின.
நெடுஞ்சாலை ஒன்றில்
நள்ளிரவில்
கனரக வாகன வெளிச்சத்தில்
பாதை மறைக்கப் பட்ட
இருசக்கர வாகனமாய் நான்.
ஒளி வெள்ளத்தை உதிர்த்த
அதே விழிகள்
பின்னாளில்
குளுமையைக் கொட்டிக் கொடுக்கத்
தவறவில்லை.
இப்போதெல்லாம்
மின்சாரம் மறந்த
கிராமத்து
தெருவிளக்காய் நான்

Monday, November 23, 2009

பேரூந்து

பேருந்தில்
நீ ஏறிப் போவதைப்
பார்த்தால்
நானோ
சீருந்தாய் ஓட்டிடுவேன்
சைக்கிளைப் பின் தொடர்ந்து
சன்னலில் பார்த்து
நீ சிரித்தால்
சிலை நான்

Wednesday, November 4, 2009

பாதை


இனியவளே

கம்பன் உன்னைக் கண்டிருந்தால்

சீதையைப் பாடாமல்

உன்

பாதையைப் பாடியிருப்பான்.


புத்தன் கூட,

உன்னைக் கண்டிருந்தால்

போதிமரத்திலும்

கட்டில் தான் செய்திருப்பான்.

Monday, November 2, 2009

விழி


பாதைகள் எல்லாம்

பயணத்தை தொலைத்து

உன்

நயனத்தின் ஈர்ப்பு விசைக்கு

இலக்காகி விடுகின்றன.


புவி ஈர்ப்பு விசை படித்திருக்கிறேன்

உன்

விழியீர்ப்பு விசையில் அகப்பட்டு

அவதியுறுகிறேன்.


கண்களின் கதிர்வீச்சில்

காயப்பட்டு கிடக்கிறது

காயம்.


எனது விழித்திரையில்

உனது அழகு

விழாக்கோலம் ஆனது.