Saturday, February 4, 2012

சொல்ல ஒரு சொல்லின்றி .........................

எத்தனைக் காலம் நித்திரை இழந்தேன்
என்பதை நீயும் அறிவாயா?
புத்தனைப் போலே இத்தனை இழந்தும்
புன்னகை தொலைத்தேன் புரிவாயா?
சித்தனைப் போலே இத்தரை வாழ்தல்
சின்ன எளிய செயலா சொல்?
அத்தனை சொல்லும் ஆழ்குள நெஞ்சில்
அன்பே ஒருசொல் கிடைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றியே நானும்
பிறிதொரு சொல்லும் பிறக்கவில்லை
மொத்தமாய் எவனோ குத்தகை எடுத்து
முகிலில் அலைந்திட விட்டானா?
கத்தியே நானும் கவிதை படைத்தும்
கருணை இல்லையோ தமிழ் தாயே
புத்தியில் புகுந்து புதுசொல் கொடுத்திடு
புத்துயிர் அடையும் என்காதல்

Saturday, January 7, 2012

தானே............

ஆண்டிறுதியில்
ஒரு
அவலம் அறங்கேறியது.

தானே வந்த
தானே புயலால்
தவித்தது
மரங்களும் மக்களுமா?
நானுந்தான்.

காதல் சிறு பஞ்சை
காத்து வைத்திருந்த நெஞ்சை
காததூரம் வீசியெறிந்து
கலங்கடித்துவிட்டது.

உள்ளுக்குள்
உருண்டு திரண்ட
உன்
நினைவுகளை
உலுக்கிவிட்டுச் சென்றது.

கரையைத் தாண்டி
கான்கிரீட் சாலைகளில்
கற்களை வீசியதைப் போல்
மனத்தில் தங்கியிருந்த
நிகழ்வுகளின் குவியல்களை
வெளிக்கொணர்ந்து
வெறுப்பேற்றிச் சென்றது

வானை நோக்கி
வளர்ந்த பெருமரங்கள்
ஆனை சரிந்ததுபோல்
அடியோடு பெயர்ந்தபோது
நம் காதல் மரம் சாய்ந்த
நாட்களையே நானுணர்ந்தேன்

பசுமையாய் இருந்த எதையும்
பார்க்க சகிக்காத
தானே புயல்
பழி தீர்த்துக் கொண்டதுபோல்
பசுமையான
உன் சார்ந்த தருணங்கள்
பறந்துவிடாமல்
பாதுகாத்துக் கொண்டிருக்கின்றாய்.

தானே வந்ததுபோல்
நீயும்
தானே தான் வந்தாய்

தனியாய்
புலம்பவிட்டு
தடம்பதித்துச் சென்றாய்....................