Thursday, January 17, 2019

மாலை மதியழகில் -கண்ணமா
மதிமயங்கி
நின்றேனடி .

சோலைக் குயிலனைத்தும்- உன்
குரலிசை
பரப்புதடி

நா(ள்)ளை மறந்தேனடி - உந்தன்
நனவொன்றே
அணிந்தேனடி

பாலை மனத்தினிலே -நீயே
பால்வார்த்த
பாவையடி

சாலை மரங்களெல்லாம் -உனக்கு
சாமரம்
வீசுதடி

கோல மயிலெல்லாம் -உந்தன்
கோட்டில்
நடக்குதடி

ஓலைக் குடிசையிலே -நிலவு
ஒளிந்துனைப்
பார்க்குதடி

சேலைத் தழுவிடவே -காற்று
தேசங்கள்
சுற்றுதடி

காலை இளம்பரிதி -உன்னை
கண்டதும்
நாணுதடி

மாலை மயக்கத்திலே-பகலும்
மதிமயங்கி
சொக்குதடி
















பேசினாலும் ஏசினாலும்
பார்த்தாலும் மறுத்தாலும்
நேசிப்பின் சுவாசம் நீ
நெஞ்சத்தின் வாசம் நீ

எனை நீ மறந்தாலும்
உனைநான் மறவேனே
கனவாய் ஆனாலும்
காலங்கள் போனாலும்
நினைவெலாம் நீதானே
நித்தம் உன்குரல்தானே
நெஞ்சினிக்கும் தேன் தானே!

பிரியம்நீ என்றாலே
பெருமகிழ்ச்சி எனக்குள்ளே
திறவாய் உன்மனதை
தித்திக்கும் சிரிப்பாலே
விட்டு விட்டு சிரிக்கையிலே
விடாமல் பற்றிக்கொண்டு
கட்டுப்பட்டு கடக்குறேன்டி
உன் கலகல சிரிப்புக்குள்ளே!