Thursday, May 20, 2021

கவிதைக்காரி

 நீ நடந்து வருகையிலே நிலமகளும் நாணும்

உடன்தொடரும் தென்றலும் உன் மென்மையிலே மயங்கும்
கவிதொடுத்து படிக்கையிலே கலையரங்கம் ஏங்கும்
கருத்து உவமை இனிமை கண்டு
கைத்தட்டி இரசிக்கும்
காதலோடு பாடும்போது கனிந்து மனது உருகும்
காரி உமிழ்வாய் சமூக அவலம் அவை கண்ணம் தொட்டு பார்க்கும்
எதிலும் பொறுமை நிதானம் உந்தன் இத்தனை உயரவெற்றி
எடுத்த செயலை முடிப்பதுதான் உனக்கு இத்தனை பெற்றி
கடுஞ்சொல் ஒன்றும் சொல்லாத கவிதைக்காரி நீயே
காலமெல்லாம் காதில் ஒலிக்கும் கவிதை நெய்வாய் தாயே
கேட்டு கேட்டு கிறுகிறுப்பேன் மழலைமொழியைப் போலே
கிளர்ந்து எழும் உணர்வுகளின் இருப்பிடமும் நீயே !
கவிதை உறவு நமக்குள் புகுந்து காதலாகி மலர
கமுக்கமாய் தொடருதம்மா கன்னித் தீவைப்போல
வாழ்வாங்கு வாழ்க நீயும் வண்டமிழைப்போல
ஏழேழு பிறவியிலும் தொடரும் இந்த உறவு
கவிதைக்காரி வாழ்க !காலம் வென்று வாழ்க !

காதலே! காதலே !

 வானம் மண்ணை மழைத்துளியால் முத்தமிடுதுடா -அந்த

கானக்குயிலும் கவிதை இசைத்து காதல் செய்யுதடா
உயிருக்கெல்லாம் காதல்தானே உந்துசக்தியடா
கயிறுமேல மேல வாழ்க்கையானாலும் காதல் பொதுவடா

பஞ்சுபோல பறக்கும் மனது காதல் வந்தாலே
பகலும் இரவும் மாறிவரும் காதல் சேர்ந்தாலே
பிஞ்சு மனசு காதல் வந்து பித்து பிடிக்குமடா
பிறந்த பிறப்பில் அப்போதுதான் பொருள் இருக்குமடா !

காச பார்த்து பணத்த பார்த்து காதல் வாராது
வேசம் போட்டால் வெறுமனே காதல் சேராது
ஆசை மட்டும் இருந்தால் காதல் அதுவும் வாராது
ஆழமான அன்பு இருந்தால் காதல் அடங்கி நிற்காது

ஒளியும் இலையும் கூட்டாஞ்சோறு ஆக்கும் காதலால்
ஓடை மணலும் உறிஞ்சி நீரைக் குடிக்கும் காதலால்
வளியை சுமக்கும் பலூனாய் காதல் பறக்கும் வானிலே
வலியும் பொறுத்து பொறுத்து காதல் வாழும் உலகிலே !

காதலுக்கு சாதிமதம் வேப்பிலை கசப்பு
கண்ணும் கண்ணும் சேர்ந்தபின்னே கருப்பட்டி இனிப்பு
சாதலும் ஏற்குமே காதலே!சண்டைகள் பார்க்குமே காதலே!
ஆதலினால் காதலொரு காவிய படைப்பே !

சட்டம் போட்டு தடுத்தாலும் அத்து மீறிடும் !
சனாதனம் தடுத்தாலும் வென்று நின்றிடும் !
பட்டம் பதவி பவிசு எல்லாம் காதல் பார்க்காது
பாலைவன சோலையாக காதல் மலருமே !

உயிரும் உயிரும் சேர்ந்துவாழ காதல் அவசியம்
உலகம் இதனை ஊன்றிவாழ பகைமை பறந்திடும்
தயிரில் நெய்யைப்போல வாழ்வில் காதல் இருக்கனும்
தழைத்து வாழ்க்கை நனிசிறக்க காதல் வளர்க்கனும்











Thursday, January 17, 2019

மாலை மதியழகில் -கண்ணமா
மதிமயங்கி
நின்றேனடி .

சோலைக் குயிலனைத்தும்- உன்
குரலிசை
பரப்புதடி

நா(ள்)ளை மறந்தேனடி - உந்தன்
நனவொன்றே
அணிந்தேனடி

பாலை மனத்தினிலே -நீயே
பால்வார்த்த
பாவையடி

சாலை மரங்களெல்லாம் -உனக்கு
சாமரம்
வீசுதடி

கோல மயிலெல்லாம் -உந்தன்
கோட்டில்
நடக்குதடி

ஓலைக் குடிசையிலே -நிலவு
ஒளிந்துனைப்
பார்க்குதடி

சேலைத் தழுவிடவே -காற்று
தேசங்கள்
சுற்றுதடி

காலை இளம்பரிதி -உன்னை
கண்டதும்
நாணுதடி

மாலை மயக்கத்திலே-பகலும்
மதிமயங்கி
சொக்குதடி
















பேசினாலும் ஏசினாலும்
பார்த்தாலும் மறுத்தாலும்
நேசிப்பின் சுவாசம் நீ
நெஞ்சத்தின் வாசம் நீ

எனை நீ மறந்தாலும்
உனைநான் மறவேனே
கனவாய் ஆனாலும்
காலங்கள் போனாலும்
நினைவெலாம் நீதானே
நித்தம் உன்குரல்தானே
நெஞ்சினிக்கும் தேன் தானே!

பிரியம்நீ என்றாலே
பெருமகிழ்ச்சி எனக்குள்ளே
திறவாய் உன்மனதை
தித்திக்கும் சிரிப்பாலே
விட்டு விட்டு சிரிக்கையிலே
விடாமல் பற்றிக்கொண்டு
கட்டுப்பட்டு கடக்குறேன்டி
உன் கலகல சிரிப்புக்குள்ளே!

Saturday, February 4, 2012

சொல்ல ஒரு சொல்லின்றி .........................

எத்தனைக் காலம் நித்திரை இழந்தேன்
என்பதை நீயும் அறிவாயா?
புத்தனைப் போலே இத்தனை இழந்தும்
புன்னகை தொலைத்தேன் புரிவாயா?
சித்தனைப் போலே இத்தரை வாழ்தல்
சின்ன எளிய செயலா சொல்?
அத்தனை சொல்லும் ஆழ்குள நெஞ்சில்
அன்பே ஒருசொல் கிடைக்கவில்லை
பித்தனைப் போலே பிதற்றியே நானும்
பிறிதொரு சொல்லும் பிறக்கவில்லை
மொத்தமாய் எவனோ குத்தகை எடுத்து
முகிலில் அலைந்திட விட்டானா?
கத்தியே நானும் கவிதை படைத்தும்
கருணை இல்லையோ தமிழ் தாயே
புத்தியில் புகுந்து புதுசொல் கொடுத்திடு
புத்துயிர் அடையும் என்காதல்

Saturday, January 7, 2012

தானே............

ஆண்டிறுதியில்
ஒரு
அவலம் அறங்கேறியது.

தானே வந்த
தானே புயலால்
தவித்தது
மரங்களும் மக்களுமா?
நானுந்தான்.

காதல் சிறு பஞ்சை
காத்து வைத்திருந்த நெஞ்சை
காததூரம் வீசியெறிந்து
கலங்கடித்துவிட்டது.

உள்ளுக்குள்
உருண்டு திரண்ட
உன்
நினைவுகளை
உலுக்கிவிட்டுச் சென்றது.

கரையைத் தாண்டி
கான்கிரீட் சாலைகளில்
கற்களை வீசியதைப் போல்
மனத்தில் தங்கியிருந்த
நிகழ்வுகளின் குவியல்களை
வெளிக்கொணர்ந்து
வெறுப்பேற்றிச் சென்றது

வானை நோக்கி
வளர்ந்த பெருமரங்கள்
ஆனை சரிந்ததுபோல்
அடியோடு பெயர்ந்தபோது
நம் காதல் மரம் சாய்ந்த
நாட்களையே நானுணர்ந்தேன்

பசுமையாய் இருந்த எதையும்
பார்க்க சகிக்காத
தானே புயல்
பழி தீர்த்துக் கொண்டதுபோல்
பசுமையான
உன் சார்ந்த தருணங்கள்
பறந்துவிடாமல்
பாதுகாத்துக் கொண்டிருக்கின்றாய்.

தானே வந்ததுபோல்
நீயும்
தானே தான் வந்தாய்

தனியாய்
புலம்பவிட்டு
தடம்பதித்துச் சென்றாய்....................

Thursday, July 28, 2011

அலையழகி

ஆண்டுக்கொரு முறைவரும்
ஊர்த் திருவிழா

ஆனால்
ஆண்டுமுழுவதும்
உன்
அவதார நாள்
நோக்கியே
என்
அத்தனை அடிகளும்.

நீ
என்னில் விதைத்த
பதிவுகள்
பதியமாய்
நெஞ்ச நிலத்தின்
வெளிமுழுவதும்
விரவிக் கிடக்கின்றன.
அலைக்கும்
நம்மிருவருக்கும்
அப்படியொரு நெருக்கம்.

நீ
அலைத்தாயின்
அடிமடியில்
அருந்தியவள்
நான்
அலைத்தாயின்
ஓரப்பார்வையில்
உயிர்வளர்ந்தவன்.

அதனால் தானோ
என்னவோ
அப்படியொரு ஈர்ப்பு
உன்
அகலவிரிந்த
அணு விழிகளின்
மீதெனக்கு.

ஆண்டுகள் பலவானாலும்
மீண்டும் மீண்டும்
மீள்பார்வையில்
உன்
பார்வை மட்டுமே.

வீட்டுக்கொரு
மரம் வளர்த்தால்
ஊரே காடாகும்.
உள்ளம் முழுக்க
உன் நினைவுகள்
எள்ளுக்கும் இடமின்றி
எத்தனை பதிவுகள்.

நெஞ்சக் காட்டுக்குள்
நீக்கமற நிறைந்திருப்பவை
உந்தன் நினைவுமரங்கள்

யாராலும் வெட்ட முடியாத
காதல் தோப்பின்
கனவு மரங்கள்.

பழகிய நாட்களின்
பசுமை போர்த்திய
பரந்த சொல்வெளிகள்.

அழகிய உடைகளின்
அணிவகுப்பான
மலர்ச்செடிகள்.

கண்ணசைவின்
காந்தப்புல விசைகள்.

நிமிர்ந்து நடக்கையில்
நின்
நெஞ்சை விட்டு
நீள்விழி நோக்குவேன்.

கொஞ்சம் குனிந்து
வஞ்சகம் செய்யாமல்
வாரி வழங்கிடுவாய்
பார்வை பருக்கைகளை.

எலிக்கறித் தேடும்
ஏழை உழவனுக்கு
களி கிடைத்தார்போல்
களிப்பெய்திடுவேன்.

கல்லூரி காலத்தின்
கொடைக்கானல் செலவு
உள்ளூறி உறைந்து கிடக்கையில்
நல்ல வேலையாய்
நாமிணைந்து செல்ல
இன்னுமொரு வாய்ப்பு.

ஒண்றாய் உண்டு
ஒண்றாய் கலந்து
உறவாடி மகிழ்ந்த
உன்னத கணங்கள்.

உன்
பிறந்தநாள்
என்றாலே எனக்கு
கோடை விடுமுறையைக்
கொண்டாடும்
குழந்தையின் மகிழ்ச்சி.

ஆடை மறந்து
அடைமழையில்
ஆடித் திரிந்திடும்
அம்மண மகிழ்ச்சி

சோடி சேராவிட்டாலும்
சோகத்தை பங்கிடும்
சுகமான மகிழ்ச்சி.

உன்னை
உன் நினைவுகளை
என்னால் எப்போதும்
கண்ணகல முடிவதில்லை.

வளர்பிறையென
வளமும் நலமும்
உனைச்சேர
குளிர் நிலவென
குழந்தை, துணையும்
உனைச் சூழ
களிப்பினினில்
காலமெல்லாம்
நீ வாழ்க
வாழ்க வாழ்க