Thursday, July 28, 2011

அலையழகி

ஆண்டுக்கொரு முறைவரும்
ஊர்த் திருவிழா

ஆனால்
ஆண்டுமுழுவதும்
உன்
அவதார நாள்
நோக்கியே
என்
அத்தனை அடிகளும்.

நீ
என்னில் விதைத்த
பதிவுகள்
பதியமாய்
நெஞ்ச நிலத்தின்
வெளிமுழுவதும்
விரவிக் கிடக்கின்றன.
அலைக்கும்
நம்மிருவருக்கும்
அப்படியொரு நெருக்கம்.

நீ
அலைத்தாயின்
அடிமடியில்
அருந்தியவள்
நான்
அலைத்தாயின்
ஓரப்பார்வையில்
உயிர்வளர்ந்தவன்.

அதனால் தானோ
என்னவோ
அப்படியொரு ஈர்ப்பு
உன்
அகலவிரிந்த
அணு விழிகளின்
மீதெனக்கு.

ஆண்டுகள் பலவானாலும்
மீண்டும் மீண்டும்
மீள்பார்வையில்
உன்
பார்வை மட்டுமே.

வீட்டுக்கொரு
மரம் வளர்த்தால்
ஊரே காடாகும்.
உள்ளம் முழுக்க
உன் நினைவுகள்
எள்ளுக்கும் இடமின்றி
எத்தனை பதிவுகள்.

நெஞ்சக் காட்டுக்குள்
நீக்கமற நிறைந்திருப்பவை
உந்தன் நினைவுமரங்கள்

யாராலும் வெட்ட முடியாத
காதல் தோப்பின்
கனவு மரங்கள்.

பழகிய நாட்களின்
பசுமை போர்த்திய
பரந்த சொல்வெளிகள்.

அழகிய உடைகளின்
அணிவகுப்பான
மலர்ச்செடிகள்.

கண்ணசைவின்
காந்தப்புல விசைகள்.

நிமிர்ந்து நடக்கையில்
நின்
நெஞ்சை விட்டு
நீள்விழி நோக்குவேன்.

கொஞ்சம் குனிந்து
வஞ்சகம் செய்யாமல்
வாரி வழங்கிடுவாய்
பார்வை பருக்கைகளை.

எலிக்கறித் தேடும்
ஏழை உழவனுக்கு
களி கிடைத்தார்போல்
களிப்பெய்திடுவேன்.

கல்லூரி காலத்தின்
கொடைக்கானல் செலவு
உள்ளூறி உறைந்து கிடக்கையில்
நல்ல வேலையாய்
நாமிணைந்து செல்ல
இன்னுமொரு வாய்ப்பு.

ஒண்றாய் உண்டு
ஒண்றாய் கலந்து
உறவாடி மகிழ்ந்த
உன்னத கணங்கள்.

உன்
பிறந்தநாள்
என்றாலே எனக்கு
கோடை விடுமுறையைக்
கொண்டாடும்
குழந்தையின் மகிழ்ச்சி.

ஆடை மறந்து
அடைமழையில்
ஆடித் திரிந்திடும்
அம்மண மகிழ்ச்சி

சோடி சேராவிட்டாலும்
சோகத்தை பங்கிடும்
சுகமான மகிழ்ச்சி.

உன்னை
உன் நினைவுகளை
என்னால் எப்போதும்
கண்ணகல முடிவதில்லை.

வளர்பிறையென
வளமும் நலமும்
உனைச்சேர
குளிர் நிலவென
குழந்தை, துணையும்
உனைச் சூழ
களிப்பினினில்
காலமெல்லாம்
நீ வாழ்க
வாழ்க வாழ்க