Wednesday, July 28, 2010

பிறந்த நாள்


நீ
பிறந்த நாள்
என்
வாழ்க்கை மலர்ந்த நாள்.

எந்த நாளும்
நான்
இப்படி மகிழ்ந்ததில்லை.

உன்
பிறந்த நாள்
பிறப்பதற்கு முன்
எனக்கு விடிந்துவிடுகிறது.

ஓராண்டுக்கு முன்பே
நான்
புத்தாடை எடுத்துக்கொள்கிறேன்.

அடுத்த ஆண்டென்பது
என் அகராதியில்
அடுத்த நொடி.

நீ
எடுத்தடி வைத்தபோது
என் மனத்தில்
எத்தனை அதிர்வுகள்.

ஆழ்மன நாட்காட்டியில்
அப்படியே
அந்தப் பதிவுகள்.

பிறப்பொன்றும்
இறப்பதற்காக அல்ல
மறக்காமல்
உன்னை
மனத்தில் இருத்திக்கொள்ளவே.

வாழ்த்துச் சொல்ல
வார்த்தைக் கிடைக்கவில்லை
வாழ்கவென்று
தனக்குத்தானே சொல்லிக்கொள்வது
பைத்தியக்காரத் தனமல்லவா?

எத்தனைப் பேரைச்
சந்தித்திருப்பேன்
நீ மட்டுந்தானே
என் நெஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாய் .

சித்திரை நிலவாய்
அமாவாசையிலும்
முத்திரை பதித்தாயே.

கவிதை
எழுத உட்கார்ந்தால்
அருவியென அளிப்பாயே.

உன்னை எழுதுதற்கு
ஏன்
ஓரவஞ்சனை செய்கிறாய்?

பிள்ளையார்
சுழி போட மறுப்பவன்
உன்
பேரெழுதியல்லவா
தொடங்குகிறேன்.

நீ
இல்லாவிட்டால்
என்
கவிதைப் புத்தகம்
வெறும் காகிதம் தான்.

அடிக்கடிப் பேசுகிறாய்
அலைபேசியில்
அலுவல் மொழி.

ஆன்மாவோடு
பேசுகிறேன்
அன்புமொழி.

கண்ணிலே அன்பிருந்தால
கல்லிலே தெய்வம் வரும்
பாடினாய்
தேடினேன்.

கூடு வேறு
வீடு வேறு
குடியிருக்கும்
உயிர் ஒன்று.

அருகருகே இருந்தாலும்
அணுவளவும்
நாம்
அத்துமீறியதில்லை.

நித்திரையிலும்
நிழலாடும்
நின் நிஜம.

பூக்களின் வாசம்
உன் புன்னகை நேசம்

நாக்கினில் வந்து
நடுத்தொன்டை இறங்கும்
வாக்கினை இழந்தேன்
உனை
வாழ்த்திடமுனைந்து.

ஈக்களே அமரா
இளம் பூங்கொத்தை
எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்.

உற்றத் துனையோடும்
உயிர் குழந்தைகளோடும்
கற்கண்டு தமிழ்போல
காலமெல்லாம் வாழ்க நன்றே







Thursday, April 29, 2010

மரணம்

அன்பை
ஆராதிக்காமல்
அடக்கிட முயன்றால்
ஆபத்து சூழந்து
அவசியம் வரலாம் மரணம்.

சேர்வதும் பிரிவதும்
தெய்வத்தின் செயலானால்
யார் விரும்பி ஏற்பார்
காதலர் பிரிவை விரும்பும்
கடவுளை.

உயிரின் தோற்றமே
காதலின் தோற்றம்

காதலின் வலிமையே
சாதலின் எளிமை

நெஞ்சுக்குள் குடிபுகுந்த
நேசவுயிர்
ஒருபோதும்
சென்றுவிட முடியாது
நினைத்தபடி தனியாக.

மரணங்கள்
காதலை
வாழவைத்துக் கொண்டிருக்கின்றன
மனிதன் தோன்றியது முதல்.

வாழும் புவியில்
வாழவே பிறந்தோம்
வாழட்டும் காதல்
மரணத்தை வென்று..

Tuesday, April 13, 2010


இன்றும் உன்னைச் சந்தித்தேன்
உணவகத்தின் கடைசி தளத்தில்
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.
உன் முகம் பார்த்து
மலர்ந்தேன்.
அதரம் சிவந்து
என்னை ஆராதித்தாய்.

வாங்க என்று
ஓசையில்லாமல்
ஆசையாய் சொன்னாய்.

சிரிப்பு சிந்திய
மகிழ்ச்சியில்
நான்
சில கணங்கள்
கான்கிரீட் தூணானேன்.

இழுத்து விட்ட
ரப்பரென
மீண்டேன்
அடுத்த நொடி.

உன்னோடு சேர்ந்து
உணவருந்த
மற்றுமொரு வாய்ப்பு.

உன்னைக் கண்ட மகிழ்ச்சியில்
மனது நிரம்பி வழிந்தது
மழையைக் கண்ட பாலையாய்.

மின்வெட்டு போல
உன் வரவு புதிரானது
கண்கட்டு வித்தையாய்
உன்
தரிசனம்.

Saturday, April 10, 2010

கானல்


விருந்தொன்றில்
நீ
என் விருந்தானாய்.

உள்ளே நுழைகையில்
ஆயிரம் பார்வைகளில்
உன்
ஆடும் விழிகள்
என்னை
ஆட்கொண்டுவிட்டன.

கறி சோறு உண்பதைவிட
உன்
ஓரவிழி தரிசனம்
எனக்கு கிடைத்த ஆஸ்கார்.

கைக்கு கிட்டியது
வாய்க்கு எட்டாத நிலையில்
விருந்து
மருந்தானது.

உண்டு முடித்ததும்
உன்னோடு பகிர்வு
நான் அழைத்தேன்..
நானுந்தான்..

நண்பர்களுக்குப் புரியவில்லை
நம்முடைய உரையாடல்
உள்ளுறை பொருளாக
உள்ளத்துள்.

பரந்த உள்ளமுள்ள
எனக்கு
திறந்துவிடவில்லை
உன்
உள்ளக் கதவு.

அறிந்தும் அறியாமல்
புரிந்தும் புரியாமல்
நிரந்தரமானது காதல்.

Friday, February 19, 2010

அலைபேசி


அலைபேசியில்
உன்னை அழைத்தேன்
அலைபாயும்
என் மனத்துக்கு ஆறுதலாக
உன்
வளையோசைக் கேட்டது.

'எப்படி இருக்கீங்க?'
முந்திக்கொண்டது
உன்
மென்மை.
நன்றாய் இருப்பதாய்
நானுந்தான் சொல்லிவைத்தேன்.

'பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்'?
தாய்மையின் கரிசனத்தோடு
தவறாமல் கேட்டாய்.

நன்றாகப் படிப்பதாய்
நான் பதிலுரைக்க
நான் ஏனழைத்தேன்
என
நீ வினவினாய்.

உன்னோடு பேச
உன் குரலைக் கேட்க
என்னை உயிர்ப்பிக்க.

தொண்டைக்குள்
சிக்கிய முள்ளாய்
விடையிருக்க.

நேரில் சந்திப்பதாய்
நிறுத்தினேன் அலைபேசியை.

அலைமகள் உந்தன்
ஆனந்த கீதம்
அப்படியே
செவியிலும் மெய்யிலும்

Sunday, January 3, 2010

மடி


உன்னைப் பார்த்து
ஆனது சில நாட்கள்
எப்படியாவது சந்திப்பு
நிகழ்ந்துவிடும்

அப்படியொன்றும்
நடக்கவில்லை சமீபத்தில்
ஏனென்றும் தெரியவில்லை
எதற்கென்றும் புரியவில்லை.

வலிய வந்து
உன்னைப் பார்க்கவும்
முடிவதில்லை.

கரையைத் தொடும்
அலைகளாகவே
என் நினைவுகள்
எப்போதும் உன் காலடியில்.

உன்னைப் பற்றிய நினைவுகளும்
உன் சார்ந்த நிஜங்களும்
என்னை எப்போதும் கலவரமூட்டுகின்றன.

ஆனால்
என் மனம் மட்டும்
எப்போதும் உன்
மடியிலேயேக் கிடக்கிறது.